Thursday, December 22, 2016

ஊழலில் தலைசிறந்த "ராம மோகன ராவ்களையே "....

நாங்கள் தெளிவானவர்கள்

அதனால்தான்
சோத்துமூட்டை கட்டும்போதே
வெளிஎலிகள் தின்றுவிடாது பாதுகாக்க
அதனுள்
இரண்டு பெருச்சாலிகளைவைத்தே
கட்டிவிடுகிறோம்

நாங்கள் விவரமானவர்கள்

அதனால்தான்
மகளிர்விடுதிப் பெண்களை
வெளிக்காமுகர்களிடம் இருந்துப் பாதுகாக்க
விடுதிக்காவலர்களாய்
கற்பழிப்பிற்காக
தண்டனைப் பெற்றவரையே
காவல்வைத்துவிடுகிறோம்

நாங்கள் அறிவானவர்கள்

அதனால்தான்
பள்ளித் தலைமை ஆசிரியர்
ஓய்வுபெறுகையில்
ஆசிரியர்களுக்குள் போட்டிவராதிருக்க
அவருக்கு மிகவும் நெருக்கமான
அவர்குறித்து அதிகம் தெரிந்த
கடை நிலை ஊழியரையே
தலைமை ஆசிரியராக்கி விடுகிறோம்

நாங்கள் வெகுப் புத்திசாலிகள்

அதனால்தான்
ஊழல் ஒரு பிரச்சனை என
எண்ணம் கொள்ளாதிருக்க
வெளி ஊழல் அரசு ஊழலை
எப்போதும் முந்தாதிருக்க
 நிர்வாகத் தலைமைப் பொறுப்பில்
ஊழலில் தலைசிறந்த
"ராம மோகன ராவ்களையே "
தலைமைச் செயலாளராக்கிவிடுகிறோம்

நாங்கள் சிறந்த படைப்பாளிகள்

அதனால்தான்
எத்தனை மோசமான
நிகழ்வாயினும்
அதன் பாதிப்புகள் குறித்து
அலட்டிக் கொள்ளாது
தவறியும் கோபம் கொள்ளாது
அது குறித்து ஒரு கவிதையோ
முகநூல் பதிவோ கொடுத்துவிட்டு
அன்றாடக் கடமைகளில்
கவனத்தைத் திருப்பிவிடுகிறோம்

13 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம் தான். எங்கும் ஊழல். எதிலும் ஊழல். அனைத்துமே ஊழல் :(

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை ஐயா
மக்களின் கோபம் வெளியே தெரியாது
தெரிவிக்க வேண்டிய நேரத்தில் தெரியப் படுத்தப்படும்
தம +1

KILLERGEE Devakottai said...

நடைமுறை உண்மை சுடுகின்றது

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்....!

தி.தமிழ் இளங்கோ said...
This comment has been removed by the author.
தி.தமிழ் இளங்கோ said...

நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. பலரும் நமக்கென்ன வந்தது என்று போய் விடுகிறார்கள். இது அவர்களுக்கு வசதியாகப் போய் விடுகிறது

ஸ்ரீராம். said...

வேலிகளும் ஓணான்களும்!

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம் நாட்டில் கொலைக் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டவர்களையே தூக்கில் போடத் தயங்குகிறார்கள்.

அதனால் கொள்ளையடிப்பவர்களுக்கு கொஞ்சமும் வெட்கமோ, பயமோ, அவமானமோ இருப்பதாகத் தெரியவில்லை.

டாப் டு பாட்டம் எங்குமே எல்லாமே மிகவும் சகஜமாகப் போய் விட்டது.

தங்களின் ஆதங்கம் தங்கள் ஆக்கத்தில் புரிகிறது.

மிகவும் சாமான்யமானவர்களாகிய நம்மால் வேறு என்னதான் செய்ய முடியும்?

Bhanumathy Venkateswaran said...

உண்மை! கடைசி பத்தி வெகு உண்மை!

G.M Balasubramaniam said...

யாரைப்பார்த்தாலும் ஊழல் செய்பவராகவே தெரிகிறார்கள்

ஜீவி said...

பாதகம் செய்வோரைக் கண்டால்...

பாரதியின் கோபம் பார்த்தேன்.

ARIARAVIND said...

Pls admit Apollo hospital..

Thulasidharan V Thillaiakathu said...

எல்லாமே பூச்சாண்டிகளாய்த் தெரிகிறது! ஊழலின் கிரகணத்தினால் கறுப்பாகவும் தெரிகிறது!!

அனைத்து வரிகளும் உண்மை பளிச்!

கீதா

Post a Comment