Sunday, December 20, 2015

விந்தையிலும் விந்தைதான்

யானைகளைக் கட்டி
பலசமயம்
இழுக்க இயலாதுப்  போனக்
கவிதைத் தேரது

ஒரு சிறு எறும்பிழுக்க
வேகமாய்
வலம் வருவது விந்தை

குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது

ஒரு சிறு சாரலில்
முதுகு நிமிர்த்தி
ஓங்கி வளர்வது  விந்தை

படித்து
அளவுகோலில் நிறுத்து
முயன்று செய்ய ருசிக்காதக்
கவிதைக் குழம்பு

மனமளக்க
கை நிறுக்க
அதிகம் ருசிப்பது விந்தை

விதம் விதமாய்
வேடிக்கைகள் காட்டியும்
வித்தைகள் செய்தும் வரமறுக்கும்
கவிதைக் குழந்தை

எதையோ நினைத்திருக்கையில்
சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது  விந்தை

ஆம் ..
அதிசயமே அதிசயிக்கும்
அதிசயப் பெண்போல

விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான் 

7 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அதிசயமே அதிசயிக்கும் அதிசயப் பெண்போல .... விந்தையான சொற்களால் உருவான இந்த ஆக்கமும் அழகாக உள்ளது. பாராட்டுகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

அற்புதமாக அருமையான கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராஜராஜேஸ்வரி said...

விந்தை வரிகள்
சிந்தை கவர்ந்தன..
வாழ்த்துகள்..!

Kousalya Raj said...

//குடம் குடமாய்
நீரூற்ற
வளராது வாடும்
கவிதைச் செடியது//

அது எவ்வாறு என்று மிக யோசித்து ரசித்தேன்.
அருமையான வரிகள். வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

இந்தப் பதிவு எனக்கும் பிடித்தது

”தளிர் சுரேஷ்” said...

வேண்டும் போது வராது! ஆனால் வேறுபணியில் இருக்கையில் வரும் உண்மைதான்! கவிதைக் குழ்ந்தை அல்லவா? கட்டி அணைக்க வேண்டியதுதான்! அருமை! பாராட்டுக்கள்!

நிஷா said...

சட்டெனத் தாவியணைத்து
சிந்தை கவர்வது விந்தை

விந்தையே வியக்கும்
விந்தையது கவிதைதான்

Post a Comment