Wednesday, March 22, 2017

அதிகாரமற்ற அதிகாரியின்.....அதிகாரபலமற்ற அதிகாரியின்
ஆ ணைக்கு அடங்காது
நமட்டுச் சிரிப்புச் சிரிக்கும்
கடை நிலை ஊழியனாய்..

வெப்பமற்ற சூரியனின்            
வெளிச்சத்திற்கு அடங்காது
பளீரெனச் சிரிக்கிறது
வெண்பனி எங்கும்...

                                                   நிலைமை இப்படியே
                                                  நிச்சயம் தொடராது
                                                 என்னும் நம்பிக்கையுடன்
                                                 மெல்ல நகர்கிறான் கதிரவன்

"அப்போது பார்க்கலாம்"
என அசட்டுத் துணிச்சலுடன்
பரவிச் சிரிக்குது
வெண்பனி எங்கும்.    

                                             ஒருவகையில்
                                             மக்களின் ஆதரவற்று
                                             பதவியில் தொடரும்
                                             அமைச்சர்கள் போலவும்

ஆடும்வரை ஆடட்டும்
தேர்தல்வரட்டும்
 பார்க்கலாம்  என நினைக்கும்
தமிழக மக்கள் போலவும்மறைவாய் நமக்குச் சொல்லிப் போன வாழ்க்கை ரகசியம்...

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
 வாழ்க்கை ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

Friday, March 17, 2017

அறியாமையில் விளைந்த குழப்பம்

சென்ற முறை அமெரிக்கப்பயணத்தின் போது
சென்னையில் கொஞ்சம் வேலை இருந்ததால்
சென்னை வரை காரிலேயே வந்துப் பின்
விமானம்பிடித்தோம்

இந்த முறை சென்னையில் வேலையில்லாததாலும்
கூடுதலாக ஆறு மணி நேரக் கார் பயணம் கூடுத்ல்
அலுப்பைச் சேர்க்கும் என்பதாலும் மதுரையிலிருந்தே
விமானம் மூலம் கிளம்பிவிடுவது என முடிவெடுத்து
டிக்கெட்டும் எடுத்து விட்டோம்

கிளம்புகிற தினத்திற்கு முதல் நாள் காலை திடுமென
உடனெடுத்துச் செல்லும் பெட்டி எண்ணிக்கை குறித்தும்எடை குறித்தும் ஒரு சிறு குழப்பம்

குழப்பதிற்குக் காரணமுமிருந்தது

சென்ற முறை அமெரிக்காவிலிருந்து திரும்பியதும்
விமானத்திலேயே மதுரை திரும்பிவிடலாம் என
டிக்கெட் புக் செய்ய முயல அவர்கள் உள்ளூர்
விமானத்தில் ஒருவருக்கு ஒரு பெட்டிதான் எனவும்
அதுவும் பதினைந்து கிலோவுக்கு மேல்
இருத்தல் கூடாது என்றும் அப்படி இருப்பின்
கூடுதல் எடைக்கு கிலோவுக்கு ஐநூறு ரூபாய்
கூடுதல் கட்டணம்செலுத்த வேண்டும் எனவும்
திட்டவட்டமாகச் சொல்லிவிட்டனர்

எங்களிடம்   வெளி நாட்டுப்பயணத்திற்கு
அனுமதிக்கிறபடி22 கிலோஎடையில்
இரண்டு பெட்டிகள்இருந்ததால் கார் பயணமாகவே
மதுரை வந்து சேர்ந்தோம்

இந்தமுறையும் அப்படி ஏதும் இருக்குமா என்கிற
குழப்பம் வர , முதல் நாளே அந்த
விமான அலுவலக்த்தில்பணிபுரிகிறவரிடம்
கேட்க முயல அவரைத் தொடர்பு
கொள்ள இயலவில்லை

நானும் அப்படி ஏதும் இருந்தால் தொடர்ந்து
பயணிக்கிற பெண்ணும் மாப்பிள்ளையும் ஞாபகப்
படுத்தி இருப்பார்களே என அலட்சியமாக
இருந்து விட்டேன்

மறு நாள் காலையில் எத்ற்கும் அந்த விமான
அலுவலக்த்தில்பணி புரிகிறவரிடம்
கேட்டு வைக்கலாமே என கேட்டு வைக்க
அவர் திட்டவட்டமாக" ஒருவருக்கு ஒரு பெட்டிதான்
அதுவும் பதினைந்து கிலோதான் கூடுதல்
எடைக்கு கிலோவுக்கு ஐ நூறு கட்டவேண்டி இருக்கும்
அந்த வகையில் உங்களிடம் இருக்கும் எடைக்கு
கூடுதலாக இருபத்தைந்தாயிரத்துக்குக் குறையாமல்
கட்டவேண்டி இருக்கும் " என ஒரு பெரிய
அணுகுண்டாகத் தூக்கிப் போட்டுவிட்டார்

நான் ஒருகணம் ஆடிப் போனேன்

(தொடரும் )

Wednesday, March 15, 2017

எல்லாம் சில வார ஆட்டம்தான்....

பகல் உச்சிப் பொழுது எனப் பெயர்.
அதனால் எந்தப் பலனும் இல்லை 
முழுமையாக உடல்முழுவதும் போர்த்திக்கொண்டு கூட வீ ட்டுப் பால்கனியில்  நின்று  ஒரு புகைப்படம்  எடுக்க இயலவில்லை
பனிப் பொழிவு  அத்தனைக்கடுமையாக  இ ருக்கிறது 

மக்களுக்கு நியாயமான கோபம் 
திருமதி சசிகலா அவர்கள் மீது இருந்தாலும் கூடச்  சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவருக்கு இருப்பதால் 
ஏதும் செய்யமுடியாதுமக்கள்  தவிப்பதை போலவே 
இந்தப் பனிப்பொழிவின் அட்டகாசத்தில்  கதிரவனும் 
அடங்கியே  கிடக்கிறான்
  
எல்லாம் சில வார ஆட்டம்தான்  என்பது 
நம்மைப் போலவே அவனுக்கும் தெரியும்தானே 

Friday, March 10, 2017

"ஒரு பாமரப் பதிவரின் " அமெரிக்கப் பயணம் "

கடந்த பத்து நாட்களாக தேவையில்லாமல்
அலைவதில்லை
(தேவைக்காக அலைவதே அதிகம்
அதைத் தவிர்க்க இயலவில்லை )

அளவோடு சாப்பிட்டுக் கொள்கிறோம்

முழு உடல் பரிசோதனைச் செய்து கொண்டு
குறைபாடு உள்ளதற்கு மருந்து மாத்திரை
எடுத்துக் கொள்கிறோம்

மிக முக்கியமான தகவல்களை
நாட்குறிப்பில் குறித்துக் கொள்கிறோம்

சென்றமுறை போல அவ்வளவு
பதட்டமும் குழப்பமும் இல்லையென்றாலும்
கூட கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது

மொத்தம் 31மணி நேரப் பயணம்
மலைப்பை ஏற்படுத்துகிறது

வருகிற 13 இல் மீண்டும் மனைவியுடன்
அமெரிக்கா (நியூஜெர்ஸி ) செல்கிறோம்

சென்ற முறை பதட்டத்திலேயே
மிகச் சரியாக இரசித்துப் பார்க்க முடியாததை
இம்முறை பதட்டமின்றி பார்த்து இரசிக்க
உத்தேசித்துள்ளோம்

அவசியமெனில் "ஒரு பாமரப் பதிவரின் "
அமெரிக்கப் பயணம் என ஒரு கட்டுரைத் தொகுப்பு
எழுதலாம் என்கிற எண்ணமும் இருக்கிறது

சென்றமுறை எடுத்த புகைப்படங்களின் தொகுப்பு
அடிக்கடி ஞாபகமூட்டிப் போகிறது

அமைப்பு எப்படி இருக்கிறது எனத் தெரியவில்லை

பார்ப்போம்.....

Thursday, March 9, 2017

இளைஞர்களே நாமொரு புதிய பாதையை வகுப்போமா ?...

கொள்ளையர்கள்
கொள்ளையடித்த பணத்தோடு
இன்னும் கொள்ளையடிக்க
அதிகாரம் கேட்டு
வரும் நாள் முடிவாகிவிட்டது

என்ன செய்யப்போகிறோம் ?

சொல்லாத சொல்லுக்கு
மட்டுமல்ல
விற்பனைக்கல்லாத பொருளுக்கும்
நிச்சயம் விலையில்லை

இனியும் நம் தலையில்
நாமே மண்ணை அள்ளிப் போடாதிருப்போமா ?

ஒவ்வொர் வீட்டு வாசலிலும்
"நாங்கள் விற்பனைப் பண்டமல்ல
எங்கள் வாக்கும்
விற்பனைக்கில்லை" எனும்
வாக்கியத்தை
அச்சிட்டு வைப்போமா ?

திருமங்கலம் ஃபார்முலாவுக்கு
நேர் எதிராய்
ஆர் .கே நகர் ஃபார்முலாவை உருவாக்கி

தமிழகம் கொண்டக்
கறையினைத் துடைப்போமா ?

இளைஞர்களே

நாமொரு புதிய
பாதையை  வகுப்போமா  ?

Tuesday, March 7, 2017

மிக நிச்சயமாய் நாம் மனிதனே இல்லை....

கடலில்
சுட்டுக் கொல்லப்பட்டவன்
மீனவனா
தமிழனா
இந்தியனா

அந்தக் கொடும் செயலுக்கு எதிராக
கருத்துத் தெரிவிப்பதில் கூட
இதற்குள் அவன் எதில்
அடங்குகிறான் என அலசிக் கொண்டிருக்கிறோம் எனில்  ...

இந்தக் கொலைக்கு எதிராக
எதிர்ப்பைப் பதிவு செய்வதில்
நமக்கு என்ன லாபம் இருக்கிறது
எனக்  கணக்கிட்டுக் கொண்டிருக்கிறோம் எனில்...

சந்தேகமே இல்லை
நாம் தமிழனும் இல்லை
நாம் இந்தியனும் இல்லை

காரணம்
நாம் தமிழனாகவோ
இந்தியனாகவோ
அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டுமெனில்

குறைந்த பட்சத் தகுதியாக
நாம்  அவசியம்
மனிதனாக

மிக  மிக முக்கியமாய்
மனிதத் தன்மை கொண்டவனாக
இருக்கவேண்டும் இல்லையா ?